அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே வடுகபாளையம் மங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மனைவி சரோஜா(53). இவரது மகள் பிரியா என்கின்ற பராசக்தியை (19) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில்இ கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசனுக்கும்(26), பிரியா என்ற பராசக்திக்கும் இடையே குடும்ப பிரச்சனையினால் பிரியாவை தமிழரசன் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் சரோஜா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தமிழரசனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர்இ சிறையில் இருந்து தமிழரசன் வெளியில் வந்துள்ளார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜன.23) நள்ளிரவில் பேண்ட் சட்டை அணிந்து கொண்டு கையில் அரிவாளுடன் சரோஜா, தமிழரசன் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு வெளியில் கட்டிலில் படுத்திருந்த தமிழரசனை தன் மகளைக் கொன்றதற்குப் பழி தீர்க்கும் விதமாகச் சரமாரியாக வெட்டியுள்ளார். சரோஜாவைத் தடுக்கச் சென்ற தமிழரசனின் தாயார் விமலாவையும் (45) அறிவாளால் வெட்டியுள்ளார்.
இதனையடுத்து, வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த தமிழரசன் மற்றும் அவரது தாய் விமலா ஆகிய இருவரைக் கண்ட அக்கம் பக்கத்தினர், சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆண்டிமடம் போலீசார் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்குத் தமிழரசன், விமலா ஆகிய இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகத் தமிழரசன் மட்டும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மகளைக் கொன்ற மருமகனைக் கொலை செய்யத் துணிந்த மாமியாரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வெளிநாட்டிற்கு தப்பி சென்ற குற்றவாளி; சென்னை விமான நிலையத்தில் கைது.. சிக்கியது எப்படி?