தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூரில் தண்ணீர் பற்றாக்குறை; 50 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் கருகும் அவல நிலை - விவசாயிகள் வேதனை! - agriculture

Water scarcity: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்திற்குத் தண்ணீர் இல்லாத காரணத்தால், சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் கதிர்கள் பதராக மாறக்கூடிய அவல நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

paddy crop damage in Thiruvarur
திருவாரூரில் தண்ணீர் பற்றாக்குறை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 3:44 PM IST

திருவாரூரில் தண்ணீர் பற்றாக்குறை.. 50 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் கருகும் அவல நிலை

திருவாரூர்: கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாகத் திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால் மேட்டூரில் இருந்து விவசாயத்திற்கு முறையா தண்ணீர் வராததாலும், ஆறு மற்றும் வாய்க்கால்களிலும் குறைந்த அளவிலான தண்ணீரே சென்றதாலும் பல பகுதிகளில் பயிரிடப்பட்ட குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு நிவாரணம் வழக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தது. பின்னர், அந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் சார்பில், ஒரு ஹெக்சருக்கு ரூ.13 ஆயிரத்து 500 நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்த கட்டமாக, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் ஏறத்தாழ சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்களை நடும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வந்தனர்.

அதாவது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர், புழுதிகுடி, சபாபதிபுரம், அக்கரைக்கோட்டகம், ஈசனங்குடி, குடவாசல், நன்னிலம், மாங்குடி, வடகரை, கீழ மணலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்த மழை மற்றும் வாய்க்கால், குளங்களில் கிடந்த தண்ணீரை டீசல் இன்ஜின் உதவியுடன் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அதன் காரணமாக தற்போது பயிர்கள் கதிர்விட்டு, பால் கட்டிய நிலையில் உள்ளது. அதே நேரத்தில், ஆறுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் அனைத்து பயிர்களும் பதராக மாறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக, இன்னும் 20 அல்லது 30 நாட்களுக்கு மேலாக விவசாய பயிர்களுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே தற்போது உள்ள நெற்பயிர்களைக் காப்பாற்றிக் கொண்டு வர முடியும் எனவும், இல்லையெனில் அனைத்து பயிர்களும் பதராக மாறக்கூடிய சூழ்நிலை நிலவி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோரிக்கைகள்:ஒரு மணி நேரத்திற்கு டீசல் இன்ஜினுக்கு ரூ.200 வரை செலவு செய்து தண்ணீரை இறைத்துள்ளோம். ஆகையால் டீசல் மானியம் உடனடியாக தரவேண்டும். மேலும் தண்ணீர் திறந்து விடப்படாத சூழல் நிலவினால், உடனடியாக வேளாண் துறை அதிகாரிகளைக் கொண்டு, கணக்கெடுத்துப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை இழப்பீடாக வழங்க வேண்டும். தற்போது கருகி வரும் பயிர்கள் குறித்து, மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறை அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சாலையில் விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய அமைச்சர் ஆர்.காந்தி... குவியும் பாராட்டுக்கள்!

ABOUT THE AUTHOR

...view details