செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த திருவிடந்தை கடற்கரையில், ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து தயாரித்த இந்தியாவில் முதல்முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ‘ரூமி 1’ ஹைப்ரிட் ராக்கெட், 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்து மீண்டும் பூமிக்கு திரும்பி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதியதொரு சாதனையாக ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து தயாரித்த ஹைபிரிட் 'ராக்கெட் ரூமி 1' இன்று காலை 7.02 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரை பகுதியில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அந்த செயற்கைகோள்களை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தி மீண்டும் பூமிக்கு திரும்பியது.
இந்திய விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையாக, ரூமி 1 ராக்கெட் இந்தியாவின் முதல் 0 முதல் 120 டிகிரி வரை வெவ்வேறு கோணங்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஏவும் ஹைட்ராலிக் மொபைல் ஏவுதளத்தில் இருந்து மூன்று கியூப் செயற்கைக்கோள்களை சுமந்து சென்று, புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி, வெறும் 7 நிமிடங்களில் பாதுகாப்பாக பூமிக்கு தரை இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த ராக்கெட் காஸ்மிக் கதிர்வீச்சின் தீவிரம், புறஊதா கதிர்வீச்சின் தீவிரம், காற்றின் தரம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வளிமண்டல நிலைகளை கண்காணிக்கும் 3 செயற்கைக்கோள்களுடன் 50 வெவ்வேறு சிறிய எடை கொண்ட செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஓசோன் படலம், வளிமண்டல நிலைகளின் பல்வேறு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.