கோயம்புத்தூர்:கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கோவையில் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, இன்று கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, அமைச்சர் டிஆர்பி ராஜா பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, கட்சியினர் அவருக்கு ரோஜா மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பின்பு, அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் முன்னே செல்ல, அதன் தொடர்ச்சியாக மாட்டு வண்டியில் பயணம் செய்தவாறே, அமைச்சர் டிஆர்பி ராஜா பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள், அமைச்சருக்கு டர்பன் அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
முன்னதாக, திமுக நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரது வீட்டிற்குச் சென்ற டிஆர்பி ராஜாவிற்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு சாலையில் நின்றிருந்த டிஆர்பி ராஜாவின் காரை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனை செய்த நேரத்தில், அமைச்சர் டிஆர்பி ராஜா அங்கு இல்லாத நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மதுவம்பள்ளி, வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை தென்னம்பாளையம் பகுதியில் நடைபெற்ற வாரச் சந்தையில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.
மேலும், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி பாலமலை கிராமத்தில், மாநில மாணவரணி தலைவரும், கவுண்டம்பாளையம் பொறுப்பாளருமான இரா ராஜீவ் காந்தி, மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி உள்ளிட்டோர், மலைவாழ் மக்களுடன் சேர்ந்து அவர்களின் பாரம்பரிய நடனம் ஆடியும், மேளதாளம் முழங்க இந்தியா கூட்டணியின் கோயம்புத்தூர் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கினார்.
இதையும் படிங்க: கோவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை! - Minister TRB Rajaa