சென்னை: பெருங்களத்தூர் பகுதியில் ஏற்பட்டு வந்த பல ஆண்டுக்கால போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.234 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராஸிங் மேம்பாலமும், பெருங்களத்தூரிலிருந்து காமராஜர் சாலை மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலமும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
அதன் பின்னர் கரோனா மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளால் மேம்பாலம் கட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலப் பணிகள் விரைவாக கட்டப்பட்டுக் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் பெருங்களத்தூரிலிருந்து சீனிவாசா நகர் செல்லும் ரயில்வே கிராஸிங் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
இதையடுத்து தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மேம்பாலம் ரூ.60.13 கோடி செலவில் பணிகள் பல்வேறு கட்டங்களாகக் கட்டப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு நேற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலத்தினை திறந்து வைத்தனர். மேலும் புதிய மேம்பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்று சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.