சென்னை: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுக் கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த நிலையில் இன்று(ஜன.31) முதல் செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாகச் செல்லக்கூடிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும், கிளாம்பாக்கம் பகுதியிலிருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 20 சதவீத பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று(ஜன.31) ஆய்வு மேற்கொண்டார். முழுமையாகப் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததைத்தொடர்ந்து எந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கிறது என்பது குறித்தும் அதிகாரிகளுடன் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "காலை 6 மணியிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவது துவங்கியுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் 80 சதவீத பேருந்துகள், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. மீதமுள்ள 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.
வடசென்னை பகுதியைச் சேர்ந்த திருவெற்றியூர், ஆர்.கே.நகர், திரு.வி.க நகர், துறைமுகம் ஆகிய பகுதி மக்கள் மாதவரம் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி தென் மாவட்டங்களுக்குச் செல்லலாம். வடசென்னையிலிருந்து கிளாம்பாக்கம் பகுதிக்கு வருவது கடினமாக உள்ளது என அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 160 நடைகள் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மொத்தம் 710 நடைகள் இயக்கப்படுகிறது. திருச்சிக்கு 118 நடைகளும், சேலத்திற்கு 66 நடைகளும், விருத்தாசலத்திற்கு 30 நடைகளும், கள்ளக்குறிச்சிக்கு 50 நடைகளும், விழுப்புரத்திற்கு 59 நடைகளும், கும்பகோணத்திற்கு 52 நடைகளும், சிதம்பரத்திற்கு 18 நடைகளும், நெய்வேலிக்கு 44 நடைகளும் , புதுச்சேரி வழியாகக் கடலூருக்கு 32 நடைகளும், திண்டிவனம் வழியாகப் புதுச்சேரி செல்ல 35 நடைகளும், செஞ்சி வழியாகத் திருவண்ணாமலைச் செல்ல 135 நடைகளும், போளூர்க்கு 30 நடைகளும், வந்தவாசிக்கு 46 நடைகளும் இயக்கப்பட உள்ளது.