கோயம்புத்தூர்: பீளமேடு பகுதியில் உள்ள கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு நேற்று (பிப்.2) வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, 'ரூ.6 லட்சம் மதிப்பு உள்ள விலையில்லா மிதிவண்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட 'மக்களோடு முதல்வர் திட்டம்' மாவட்ட வாரியாக மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் முடிவு ஏற்படுத்தி, தீர்வு காணப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் பல லட்சம் மக்கள் கொடுத்த மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. அந்தவகையில், கோவை மாவட்டத்தில் 601 பேர் மனுக்களுக்கான தீர்வை ஏற்படுத்தி மொத்தம் 11 கோடியே 53 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கான உத்தரவைக் கொடுக்க இருக்கிறோம். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 8ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் நலத்திட்ட நிகழ்வில் பங்கேற்கிறார். அதேபோல, வரும் 11ஆம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வர உள்ளார்' என்று தெரிவித்தார்.
மதுபானம் விலை உயர்வு: மதுபானம் விலை உயர்வு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 'மதுபானம் விலை உயர்வு பற்றிப் பேசுவது இப்போது சரியில்லை. அதைப் பற்றி பின்னாடி சொல்கிறேன்' எனப் பதிலளித்தார். 'கோவையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு குறித்த கேள்விக்கு, கோவையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பதற்கான பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டு விழா என அனைத்து பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும்.