புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று வழங்கினர்.
தமிழ்தாய் வாழ்த்து இல்லாமல் நிகழ்ச்சி துவங்காது:இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுகையில்,“ தமிழ் தாய் வாழ்த்தை திமுகாவை போல் யாரும் மதிப்பு தர முடியாது. நாங்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்காமல் எந்த அரசு நிகழ்ச்சியையும் துவங்குவதில்லை. இந்த விவகாரத்தில் ஆளுநர்தான் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். அவர் சர்ச்சை ஆக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டு இருக்காது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வில் ஏற்பட்டது மைக் பிரச்சினை மெக்கானிக்கல் கோளாறு. இதை நாம் தவிர்க்க முடியாது.
சி.வி. சண்முகத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்:முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நாங்கள் வழக்கு போட்டு அவரை பழிவாங்க வேண்டியதில்லை. ஏனென்றால் அவரை ஏற்கனவே அவரது கட்சிக்காரர்களை பழி வாங்கி வருகின்றனர். முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று ஒற்றையாளாக போராட்டம் நடத்தியுள்ளார். அவருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.