சென்னை: நடப்பாண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 26) நடைபெற்ற சுற்றுலாத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் 12 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ரூ.8.10 கோடி மதிப்பில் சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி - அமைச்சர் ராமச்சந்திரன் அசத்தல் அறிவிப்பு! - TN Assembly Session 2024 - TN ASSEMBLY SESSION 2024
Tourism Development Schemes: சுற்றுலாத் தலங்களில் ரூ.8.10 கோடி செலவில் அடிப்படை வசதிகள், ரூ.2 கோடி மதிப்பில் சுற்றுலாப் பெருந்திட்டம் உள்ளிட்ட 12 புதிய அறிவிப்புகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் அறிவித்தார்.
அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் சுற்றுலா தொடர்பான புகைப்படம் (Credits - minister Ramachandran X page & ETV Bharat Tamil Nadu)
Published : Jun 27, 2024, 10:39 AM IST
சுற்றுலாத்துறை சார்ந்த 12 புதிய அறிவிப்புகள்:
- "அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி, அடைக்கலமாதா தேவாலயப்பகுதி, சிவகங்கை மாவட்டம் பிரான்மலை பகுதி, திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி மற்றும் தெற்கு கள்ளிக்குளம் தேவாலயப்பகுதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆகிய வழிபாட்டு சுற்றுலாத் தலங்களில் ரூ.8.10 கோடி செலவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி மற்றும் கோட்டை நங்காஞ்சியாறு அணைப் பகுதி, மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள குட்லாடம்பட்டி அருவி மற்றும் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள புளியஞ்சோலை அருவி ஆகிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரத்தில் உள்ள தொண்டி கடற்கரை, கன்னியாகுமரியில் சங்குதுறை, சொத்தவிளை கடற்கரை பகுதி, சூரிய காட்சிமுனை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரை பகுதிகளில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அவதானப்பட்டி ஏரிப்பகுதி மேம்பாடு, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலையில் அமைந்துள்ள புங்கனூர் ஏரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமரைக்குளம் ஏரியில் படகு குழாம் மற்றும் இதர சுற்றுலாப் பணிகள் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- நீலகிரி மாவட்டத்தில் உல்லாடாவில் கிராமியச் சுற்றுலாவை மேம்படுத்தல், கேத்தி மைனல்லா மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை Hornbill பகுதியில் காட்சிமுனை அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குதல், கலாச்சாரங்கள், பல்வேறு இயற்கை தலங்கள், பழங்கால மரபுகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் வகையில், பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் விதமாக பெருந்திட்டம் (Master Plan) ரூ.2 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.
- மருத்துவம் மற்றும் ஆரோக்கியச் (Medical and Wellness Tourism) சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கோயம்புத்தூரில் பல்வேறு மருத்துவ தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மருத்துவச் சுற்றுலா மாநாடு நடத்தப்படும்.
- தமிழ்நாட்டில் நீர் சாகச விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பணிகளுக்கு ரூ.1 கோடி செலவிடப்படும்.
- தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் கடற்கரை மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காடு ஏரிப்பகுதி ஆகியவற்றில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக சுற்றுலாப் பெருந்திட்டம் (Master Plan) ரூ.1 கோடி செலவில் தயாரிக்கப்படும்.
- தமிழ்நாட்டில் கிராமியச் சுற்றுலா (Rural Tourism) மற்றும் வான்நோக்கு சுற்றுலா (Astro Tourism) ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை (Feasibility Study Report) ரூ.50 இலட்சம் செலவில் தயாரிக்கப்படும்.
- ஊட்டி, குன்னூர், கொடைக்கானல், ஏற்காடு மற்றும் பிற முக்கிய சுற்றுலா தலங்களில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டல்களை தரம் உயர்த்தும் பணிகள் ரூ.18.80 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- தமிழ்நாடு சுற்றுலா பயணச்சந்தை (Tamil Nadu Travel Mart) ரூ.1 கோடி செலவில் சென்னையில் நடத்தப்படும்" ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.