வேலூர்: ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில், இந்திய அரசின் ஏபிஐபி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கும் சமூக வலுவூட்டல் முகாம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 400 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் ஆர்.காந்தியிடம், பொங்கலுக்கு வழங்கக்கூடிய இலவச வேட்டி, சேலை வழங்குவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “தமிழக அரசின் அறிக்கையை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ராமதாஸ் பேசுகிறார். சப்ஜெக்ட் தெரிந்து பேசினால், அதற்குரிய சரியான பதிலை அளிக்கலாம். ராமதாஸ் அனுபவம் வாய்ந்த தலைவர். தமிழக அரசின் ஆணைக்கு அவர் சம்பந்தமில்லாத அறிக்கையை வெளியிட்டுள்ளார்” என்றார்.