சென்னை:மதுரையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு எனப் பரவிய தகவலுக்கு எனக்கு வந்த கட்டளையை, அரசாங்கப் பணியை நான் நிறைவேற்றினேன் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுகம் மேற்கு பகுதி 54வது வட்ட கழகம் சார்பில் மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருவிழா சூரியச்சுடர்-42 சமூகநீதி முதல்வரின் அடித்தளம், தமிழ்நாடு அவரால் உயர்ந்திடும் என்ற தலைப்பில் கொண்டிதோப்பில் 271 கட்டிடத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், பங்கேற்ற தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "திராவிட இயக்கத்துக்கு நாங்கள் 4வது தலைமுறையாக பணியாற்றுகிறோம். ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, மக்களுடைய தொடர்பையும் மக்கள் நலனையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது மிகவும் முக்கியம். அரசாங்கத்தில் இருக்கும்போது நிர்வாகத்தை சிறப்பாக நடத்த வேண்டும், அரசாங்கத்தில் இருக்கிறோமோ? இல்லையோ? அரசியல் என்ற அடிப்படையில் மக்கள் நலனை தினமும் காக்க வேண்டும் என்பது நல்ல இயக்கத்தின் கடமையாகும், அடையாளமாகும்.
அரசாங்கத்தை சிறப்பாக நடத்துவது என்பது சாதாரண பணி கிடையாது. அதையெல்லாம் கடந்துதான் நாங்கள் முதலமைச்சரோடு பணி செய்து வருகிறோம். இன்று கூட ஒரு நாளிதழில் எனக்கும் பிரதமருக்கும் தனி உறவு இருப்பதுபோல செய்தி வந்தது. முதலமைச்சர் கொடுத்த பணியை தான், நான் செய்தேன். அதனால்தான், மதுரைக்குச் சென்று பிரதமரை வரவேற்று வழி அனுப்பி வைத்தேன். இதில் எந்த அரசியலும் கிடையாது; அரசாங்கத்தின் பணியை நான் செய்தேன்' என்று விளக்கமளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், '10 ஆண்டுகள் மோடி அரசாங்கம் டெல்லியில் உள்ளது. 10 ஆண்டுகளில் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்? எதற்காக வந்து சென்றார்? அரசியல் செய்வதற்காக மட்டுமே பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகிறாரே தவிர, தேர்தல் நெருங்கும் நேரத்தில் பலமுறை தமிழ்நாட்டிற்கு வருகிறாரே தவிர, உண்மையான மக்கள் நலனில் அக்கறை இருந்தால் புயல் வந்தபோது சென்னை அல்லது தூத்துக்குடிக்கோ வந்து மக்களை ஏன் சந்திக்கவில்லை' எனக் கேள்வியெழுப்பினார்.