சென்னை:சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளைக் கொண்டு செல்லும் விதமாக புதிதாக 3 மின்சார வாகனங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "கலைஞர் கருணாநிதி உயர் சிறப்பு பன்நோக்கு மருத்துவமனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி ரூ.500 கோடி செலவில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மருத்துவமனையை தொடங்கி ஒன்றரை ஆண்டுக்கு உள்ள 3,37,275 உள்நோயளிகள் பயன் பெற்றுள்ளனர். மேலும் 3881 பேருக்கு அறுவை சிகிச்சையும், 12,860 பேருக்கு சிடி ஸ்கேன்களும், 4330 எம்ஆர்ஐ , 3020 எண்டோஸ்கோபியும், 10929 டயாலிசிஸ் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தினந்தோறும் 1300 - 1500 புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இங்கு இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை, குடல், இரைப்பை, மார்பு புற்றுநோய் துறை, சிறுநீரக மருத்துவத்துறை, மூளை இரத்தநாள சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு என 15 நவீன அறுவை சிகிச்சை பிரிவுகள் மற்றும் ரத்த வங்கி, மத்திய ஆய்வகம் உள்ளது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:"அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் எய்ம் எய்ம்ஸ் தான்" - அமைச்சர் அன்பில் மகேஷ்
தொடர்ந்து பேசிய அவர், தற்போது அரசு மருத்துவமனைகளில் எம்.பிக்கள், நீதியரசர்கள், மத்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் இலவச சிகிச்சை பெறுகின்ற வகையில் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த திட்டம் இன்று முதல் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இந்த மருத்துவமனை பசுமை கட்டிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது பாராட்டி பொதுப்பணித்துறைக்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் ஹெல்த் கேர் திட்டத்தில் தங்க சான்றிதழ் தந்துள்ளனர்.
பழைய பாடத்திட்டமே தொடரும்:மேலும், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அக்.1ஆம் தேதி துவக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் பயன்படுத்த மாட்டோம். ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் பாடத்திட்டம் தான் செயல்படுத்தப்படும். தேசிய மருத்துவ ஆணையம் வழங்கும் கால அட்டவணையை மட்டுமே பயன்படுத்துவோம். ஒவ்வொரு வடகிழக்கு பருவமழைக்கும் முன்பும் இது போன்ற காய்ச்சல் வருவதுதான். டெங்கு தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 5 இறப்புகள் டெங்குவால் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.