சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ.30.5 கோடி செலவில் அதிநவீன உபகரணங்களுடன் 10 உயர் சிறப்பு அறுவை சிகிச்சை அரங்கம், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் 70 குளிரூட்டப்பட்ட தனி அறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசால் கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டது. இங்கு, 1 லட்சத்து 5 ஆயிரத்து 198 புற நோயாளிகளும், 20 ஆயிரத்து 21 உள் நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் இதுவரை 792 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. 821 எண்டோஸ் சிகிச்சை, 749 எம்.ஆர்.ஜ ஸ்கேன், 2,413 டயாலிஸிஸ் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் 750 முதல் 800 பேர் வரையிலான புற நோயாளிகள் பயன் பெற்று வருகின்றனர். தினசரி 180 முதல் 200 பேர் வரையிலான உள் நோயாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அதிநவீன டயாலிஸிஸ் இயந்திரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டது. டெல்லி மருத்துவமனையில் இருக்கக்கூடிய பே வார்டு என்கிற கட்டணப் படுக்கை வசதிகளை, தற்போது மருத்துவமனையிலும் 70 தனி அறைகளைக் கொண்டு தொடங்கி வைத்துள்ளோம்.
இது போன்ற கட்டணப் படுக்கை வசதி அரசு மருத்துவமனையில் கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும். மேலும், கட்டணப் படுக்கை அறைகள் அனைத்தும் ஏசி வசதியுடன், டிவி, பிரிட்ஜ், பீரோ மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் ஜசியூ சிகிச்சைப் பிரிவில் இருக்கக்கூடிய அனைத்து வசதியும் அந்த அறையிலேயே உள்ளது. அந்த அறைகளுக்குக் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,200 முதல் அதிகபட்ச கட்டணம் ரூ.3,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.