தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு அக்.14ஆம் தேதி முதல் வகுப்பு.. கட்டண உயர்வு தொடர்பாக அமைச்சர் விளக்கம்

இந்த ஆண்டு தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்பு, கட்டண உயர்வு வேண்டி கட்டண நிர்ணய குழுக்கு கோரிக்கை வைத்தது ஆனால் குழு தலைவரான நீதிபதி அதை நிராகரித்து உத்தரவிட்டார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

அமைச்சர் மா சுப்பிரமணியன்
அமைச்சர் மா சுப்பிரமணியன் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தீக்காய பிரிவில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தீக்காய பிரிவில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள்: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவு கடந்த 1973ஆம் ஆண்டு 2 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து தற்போது 75 படுக்கை வசதிகளுடன் கூடிய தீக்காய சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தோல் வங்கி வசதி:மின் தீக்காயங்கள், அமிலம் தீக்காயங்கள், பட்டாசு தீக்காயங்கள், ராசயன தீக்காயங்கள் என்று பல்வேறு காரணங்களுக்காக தீக்காயங்கள் ஏற்படுவது உண்டு. தீக்காய நோயாளிகள் இம்மருத்துவமனையில் புறநோயாளிகளாகவும், உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு தோல் வங்கி (SKIN BANK)தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் ரெடி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அதிநவீன கருவிகள்:கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடைநிலை பராமரிப்பு மையம், அதிர்வலை சிறுநீரக கல்நீக்க சிகிச்சை மையம், புற்றுநோய் சிகிச்சைகளுக்குரிய நானோகிராம் போன்ற அதிநவீன கருவிகள் இங்கே தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

கட்டண உயர்வை மறுத்த நீதிபதி:தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக பணம் வசூலிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு, "5 பேர் கொண்ட கட்டண நிர்ணய குழு உள்ளது. கட்டண நிர்ணய குழு தான் ஆண்டுதோறும் மருத்துவக் கல்வி மாணவர்களின் கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், நூலகக் கட்டணம் ஆகிய 3 வகையான கட்டணங்களையும் நிர்ணயிக்கும். இந்த ஆண்டும் தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்பு இந்த குழுவிடம், கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஆனால் நீதிபதி தலைமையிலான இந்த கட்டண நிர்ணய குழு, இந்த ஆண்டு உயர்த்த முடியாது. ஏற்கனவே இருக்கின்ற கட்டணம் போதுமானது என்று அதை மறுத்துவிட்டார்.

கட்டண நிர்ணய கமிட்டி:மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விடுதிக் கட்டணம், பேருந்து கட்டணங்களை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். கட்டண வசூல் புகார்கள் மாணவர்கள் சார்பாகவோ அல்லது பெற்றோர்கள் சார்பாகவோ வந்தால் கட்டண நிர்ணய கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த கமிட்டி இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரிப்பார்கள். சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களை அழைத்து நடவடிக்கை எடுப்பார்கள்.

இரண்டு புகார்கள்:இந்த ஆண்டு 2 புகார்கள் மட்டும் வந்திருக்கிறது. அந்த 2 புகார்களும் சம்மந்தபட்ட கட்டண நிர்ணயக்குழு கமிட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. நிச்சயம் அந்த 2 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேறு ஏதாவது தனியார் கல்லூரிகள் கெடுபிடி வசூல் செய்தால், புகார்கள் தரப்பட்டால் கட்டண நிர்ணயக்குழுவிற்கு புகாரினை அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்தாண்டு எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு அக்டோபர் 14ஆம் தேதியும், பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு அக்டோபர் 16ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details