திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் முத்தமிழறிஞர் கலைஞரின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நேற்று (ஆக.13) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறி (ம) துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, முதன்மை கல்வி அலுவலக உதவியாளர் பணி ஆணை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டது.
அப்போது மேடையில் பேசிய நகர்புற அமைச்சர் கே.என்.நேரு, "கலைஞரின் திருவுருவ சிலையை திறப்பதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும். நான் ஒரு அடிமட்ட தொண்டனாக, அவரை என்றைக்கும் வணங்குகிற ஒரு நபராக இருக்கும் வாய்ப்பை தந்த இப்பகுதி மக்களுக்கும் நகர மன்ற தலைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் கலைஞர் பின்னால் நாங்கள் நின்று இருக்கிறோம். அவரின் செயல்களை கண்டு நாங்கள் வியந்திருக்கிறோம்.
திராவிட இயக்கம் தோன்றியது முதல் 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகத்தான் தொடர்ந்து இருந்து கலைஞர் இந்த கட்சியை வளர்த்து வந்திருக்கிறார். அதேபோல் மு.க.ஸ்டாலினும் 40 ஆண்டுகாலம் கலைஞர் பின்னால் நின்று பணியாற்றியதால் தான் திமுக வளர்ச்சி அடைந்து, தற்போது முதலமைச்சராக இருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் நகராட்சி துறைக்காக மட்டும் ஆண்டுதோறும் ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கித் தருகிறார்கள். அதனால் தான் இந்த நகராட்சிக்கு கிட்டத்தட்ட ரூ.75 கோடி வழங்கி இருக்கிறார். திருவள்ளூர் நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் தந்த ஊக்கம் தான் விவசாயியாக இருந்த நான் நான்கு முறை அமைச்சராக இருப்பதற்கு காரணம்.
சென்னையில் முதலில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டு, அடுத்தது காஞ்சிபுரம், ஈரோடு, திருச்சி ஆகிய பகுதிகளில் அமைத்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் கலைஞர் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தற்போது திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் கலைஞர் சிலை அமைக்கப்படும்.