திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, நெல்லை மாநகராட்சிக்கு புதிய மேயரைத் தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, இன்று நெல்லையில் திமுக கவுன்சிலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகிய இருவரும் நெல்லைக்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள், இன்று பாளையங்கோட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கடைகளை ஆய்வு செய்யச் சென்றனர். அப்போது அவரை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் பிற அதிகாரிகள் வரவேற்றனர்.
அதேநேரம், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அங்கு இல்லாததால் டென்ஷன் ஆன அமைச்சர் கே.என்.நேரு, உடனடியாக தனது செல்போனில் இருந்து ஆட்சியர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டார். அப்போது, “கலெக்டரா, சார் எப்போ வரனும் கலெக்டர், நாங்கள் இரண்டு அமைச்சர்கள் இங்கே இருக்கிறோம். நீங்கள் ஏன் வரவில்லை'' என கோபித்துக் கொண்டார். பின்னர் மார்க்கெட் கடைகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து மாநகரின் பிற பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆட்சியர் இல்லாததால், அமைச்சர் ஆட்சியரை செல்போனில் கண்டித்த சம்பவம் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தியது.
கலெக்டர் இல்லாதது ஏன்?வழக்கமாக, அமைச்சர்கள் திட்டப் பணிகளை ஆய்வு செய்தால் முறைப்படி ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரே அமைச்சர்களின் பயணத் திட்டங்களை வகுப்பார். மேலும், அமைச்சர் வருவதற்கு முன்பே கலெக்டர் சம்பவ இடத்தில் ஆஜர் ஆவார். அமைச்சர்கள் வந்தவுடன் ஆட்சியர் அவர்களை வரவேற்று ஆய்வுப் பணிக்கு அழைத்துச் செல்வார்.
ஆனால், இன்று நடைபெற்ற இந்த ஆய்வுப்பணி திடீர் ஏற்பாடு என கூறப்படுகிறது. அதாவது, திமுகவின் கட்சி பிரச்னைக்காக அமைச்சர்கள் இன்று நெல்லை வந்த நிலையில், திடீரென ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். அதேநேரம், இன்று இந்து மக்களின் மிக முக்கிய நாளான ஆடி அமாவாசை என்பதால் இன்று காலை முதல் நெல்லையின் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
அதேபோல், நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவில் ஒரு லட்சம் மக்கள் கூடுவார்கள். வனப்பகுதி என்பதால், சொரிமுத்து அய்யனார் கோயிலில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
எனவே, தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கடந்த ஒரு வாரமாக ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இன்று அமாவாசை திருவிழா என்பதால், காரையாறில் லட்சக்கணக்கான மக்கள் கூடி இருக்கின்றனர். எனவே, அவர்களை கட்டுப்படுத்தும் விதமாகவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் ஆட்சியர் கார்த்திகேயன் திருவிழா கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் தான் அவரால் அமைச்சர்களின் ஆய்வில் பங்கேற்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:நெல்லை மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிப்பு.. திமுக ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?