சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு பதில் அளித்தார்.
அப்போது, "தளி தொகுதி தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு, புதிய அரசு அலுவலக கட்டிடம் 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என்றார். மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேரவையில் இரண்டு நாட்களில் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளை தரம் உயர்த்துவதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. தேவையான இடங்களை இச்சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தரம் உயர்த்துவதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதே போல், திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தாயகம் கவி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "திரு.வி.க நகர் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி 70 வது வார்டு இஎஸ்ஐ-ஏ (Esi -A) குடியிருப்பு பகுதியில் மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குறைந்த மின்னழுத்தம் கொண்ட மின்மாற்றிகள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.