சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்று அண்மையில் யூ.ஜி.சி. புதிய விதியை கொண்டு வந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெறும் வரை ஒய மாட்டோம் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் உயர் கல்வி தேசிய சராசரியை விட நல்ல நிலையில் உள்ளது. இந்த நிலையில் பல்கலைக் கழக மானியக்குழ ஜனவரி 6ந் தேதி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்சத் தகுதிகள் மற்றும் உயர் கல்வியின் தரத்தைப் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் விதிமுறைகள்-2025க்கான வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாநில உரிமைக்கு எதிரானது
இது, முழுவதுமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், பல்கலைக்கழகங்களை உருவாக்கி நிர்ணயிக்கும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. துறைகளுக்கு தொடர்பில்லாத அன்னியர்களை ஆசிரியர்களாக பரிந்துரைக்கிறது. துணைவேந்தர் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வு குழுக்களிலும் ஒன்றியத்தின் நியமன உறுப்பினர்களின் ஆதிக்கத்திற்கு வழி செய்யும் விதிகள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: "தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்பது வலதுசாரி அரசியல் நாடகம்" - திருமாவளவன் பதிலடி!
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில், மாநில அரசுக்கான உரிமையை அறவே நீக்கிவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கே முழு அதிகாரத்தையும் வழங்கும் விதிமுறை மாநில உரிமைக்கு எதிரானது. மேலும், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பதற்கு கல்வியாளர் மற்றும் கல்வித் தகுதி, அனுபவம், சிறப்பு தகுதிகள் உள்ளிட்டவைகளை கடந்து தொழிற்சாலையிலிருந்து, பொதுத்துறை நிறுவனத்திலிருந்து வல்லுநர் என்ற வகையில் கல்வியாளர் அல்லாத நபர்களை துணைவேந்தராய் நியமிக்கும் ஆபத்தான முடிவுக்கு பரிந்துரைக்கிறது.