சென்னை: குவைத் நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் மங்காப் பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 42 இந்தியர்கள் இறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இதில் தமிழத்தைச் சேர்ந்த 5 பேர் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து அயலகத் தமிழர் நலத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த பரபரப்புக்கு மத்தியில், குவைத் தீ விபத்தில் சிக்கியதாக அஞ்சப்படும் தமிழர்களின் நிலை குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவித்ததாவது, ''குவைத் நாட்டின் மங்காப் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் 195 தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். அந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்'' என்றார்.
மேலும், “உயிரிழந்தவர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் மூலம் தகவல் வந்துள்ளது. அதில், ராமநாதாபுரம், தஞ்சாவூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ராம கருப்பன், வீராசாமி மாரியப்பன், சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷெரிஃப் மற்றும் புனாப் ரிச்சர்ட் ஆகிய 5 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது'' என தெரிவித்தார்.
இருப்பினும், “குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வராததால், முதல்வரின் அறிவுறுத்தலின்படி அடுத்தகட்ட பணிகளுக்கான நடவடிக்கைகளை அயலக தமிழர் நலத்துறை மேற்கொண்டு வருகிறது. விபத்து குறித்து குவைத்தில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் பேசும் வகையில் இரு தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பலரும் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர். அவர்களது சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படுவதுடன், விபத்து குறித்த விவரங்களையும் சேகரித்து வருகிறோம்''.
''குறிப்பாக, விபத்து நடந்த கட்டிடத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதே தவிர, அப்பகுதியில் பணியாற்றும் மற்ற தமிழர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இறந்திருக்கும் பட்சத்தில், தூதரகம் தரப்பில் இருந்து முழுமையான தகவல் வந்த பிறகு இறந்தவர்களின் உடல்களை அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்''.
மேலும், “உயிரிழந்தவர்களின் உடல் கருகியிருப்பதால் அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தூதரகம் அதை உறுதிப்படுத்திய உடனே விவரங்களை அனுப்பும். அதேபோல, தற்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் தமிழர்களுக்கு சிகிச்சைக்கான உதவிகளை செய்யவும் தமிழ்ச் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் எத்தனை பேர் தங்கியிருந்தார்கள்? எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரங்கள் கிடைத்த பின்னர் தமிழக அரசு நிதி அறிவிக்கும்'' என அமைச்சர் மஸ்தான் கூறினார்.
இதையும் படிங்க:குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 5 தமிழர்கள் பலி- அமைச்சர் செஞ்சி மஸ்தான்!