வேலூர்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் காட்பாடியில் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "வட மாநிலங்களில் பாஜக ஆதரவு கிடைக்காது என்பது ஊடகம் மூலம் தெரியவருகிறது.
பாஜக கொள்கையைப் பற்றி பேசாமல் வாரிசு அரசியல் என சொல்லி தேர்தலை சந்தித்து வருகிறது. ஒருவர் திருமணம் செய்து கொள்கிறார். அவர் ஆணாக இருந்தால் பிள்ளை பெற்றுக் கொள்கிறார். தனது தந்தை போல் அரசியலுக்கு வந்தால் அது வாரிசு அரசியலா? சில பேர் கல்யாணம் செய்து கொள்வதில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்வது.
வாரிசாக இருக்கலாம் தவறில்லை. ஆனால் அவன் வார்த்தெடுத்த சிற்பம் போல், தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். ஜவஹர்லால் நேரு மிகப்பெரிய செல்வந்தராக வளர்ந்தவர். அவர் 16 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தார்.
அவருக்குப் பிறந்த மகள் இந்திரா காந்தி பாதுகாப்பு வீரரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் தேர்தல் பிரசாரத்திற்காக வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வைத்து சுக்குநூறாக சிதறடிக்கப்பட்டார். அந்த குடும்பமே சிதைந்து போனதே, இதெல்லாம் வாரிசு அரசியலா? அதன் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சோனியாவை பிரதமராக்குவோம் என்று நாங்கள் (திமுக) கூறினோம். அப்போது, தனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்றாரே, அது தியாகம் அல்லவா?' என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'அதேபோல், கருணாநிதி போராடவில்லையா? தண்டவாளத்தில் தலையைவைத்து போராடவில்லையா? கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவில்லையா? அவருடைய மகன் மிசாவில் கைது செய்யப்பட்டு, கடும் தண்டனைகள் அனுபவித்தார். அப்படி தியாகம் செய்தவர்தான் இன்று தமிழக முதலமைச்சராக உள்ளார்.
இதைபோல, தியாகம் செய்தவர்கள் உங்கள் கட்சியில் (பாஜக) உள்ளார்களா? மிசாவின் போது வாஜ்பாய் சிறையில் இருந்தார். அதற்குப் பிறகு யாராவது தியாகம் செய்தவர்கள் இருந்தார்களா? மோடி இருந்தாரா? அமித்ஷா இருந்தாரா?' எனக் கேள்வி எழுப்பினார்.