வேலூர்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறையில் இன்று (மார்ச்.04) தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் தாலுக்கா மற்றும் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஏ.பி.நந்தகுமார், அமுலு விஜயன், வேலூர் மாநகர மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், "இன்னும் இந்த நாட்டில் இருக்க இடம் இல்லாமல், உண்ண உணவு இல்லாமல், உடுக்க உடை இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். ஒரு அரசின் முக்கிய கடமை மக்களுக்கு இவைகளில் எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்வது.
அதை விட்டுவிட்டு விண்ணில் ஊர்திகளை செல்கிறோம். சந்திரனுக்கு அனுப்புகிறோம். சூரியனை நெருங்கிவிட்டோம் என்று பேசுவது அறிவுடைமைக்கு வேண்டுமானால் எடுத்துக்காட்டாக இருக்கலாம். ஆனால் மனிதாபிமானம் ஆகாது.
அதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குடிசை மாற்று வாரியம் மூலம் விடுகளை வழங்கி வருகிறோம். ஒரு அரசின் தலையாய கடமையும் இது தான். இதனை அன்றும் செய்தோம். இப்போதும் செய்து வருகிறோம்" என பேசினார்.