சென்னை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் கடந்த 28-ஆம் தேதி நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Credit - ETV Bharat Tamil Nadu) அப்போது பேசிய அவர், "அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களை தங்களது பிள்ளைகள் போல் உணர்ந்து செயல்பட வேண்டும், பள்ளி நிகழ்ச்சிகளில் யாரை அழைத்து சிறப்பு நிகழ்ச்சி நடத்துவது என்பதில் ஆசிரியர்களுக்கு புரிதல் இருக்க வேண்டும். பிற்போக்குத் தனமான நிகழ்ச்சியை நடத்திய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், அந்த நிகழ்ச்சியின் போது அறிவியல் முரண்பாடான பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான தமிழ் ஆசிரியர் சங்கருக்கு பாராட்டு தெரிவித்தார். அவரை போலவே மாணவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என அறிவுரை வழங்கினார்.
முன்னதாக இந்த விவகாரத்தில், கல்விக்கு சம்மந்தமில்லாத எந்த நிகழ்ச்சிகளும் இனி அரசு அனுமதி இன்றி பள்ளிகளில் நடத்தக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சோ.மதுமதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சை.. "அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி" - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!