Minister Anbil Mahesh Poyyamozhi தஞ்சாவூர்: நாட்டில் 18வது நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன. முதல் கட்டமாகத் தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதாவை ஆதரித்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (புதன்கிழமை) பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தளவாய்பாளையம் ஊராட்சியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்பகுதி முழுவதும் திறந்த வெளி வாகனத்தில் வந்து மக்களிடம் வாக்கு சேகரித்தனர். அப்போது மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உட்படக் கூட்டணிக் கட்சியின் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்த அமைச்சர் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தைப் போலக் கனடா நாட்டிலும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி ஒட்டு மொத்த உலகிற்கும் வழிகாட்டியாக இருக்கிறது. இதனால் பெருமையுடன் பிரசாரங்கள் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கச்சத்தீவு விவகாரத்தை தற்போது பெரிய விவாத பொருளாக பாஜகவினர் கொண்டு செல்ல பார்க்கின்றனர். அதில் நடந்த உண்மை என்னவென்று அவர்கள் பார்ப்பதில்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழக மக்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த ஒரு தலைவர்.
அவர் என்றும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத தலைவர். இதை மக்களும் நன்கு அறிந்திருக்கின்றனர். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக, கச்சத்தீவை மீட்டுக் கொண்டு வர வேண்டியதுதானே. ஏன் இலங்கை சென்ற போது இந்த பிரச்சனை குறித்துப் பேசி இருக்கலாமே" என சரமாரி கேள்வி எழுப்பினார்.
மேலும், "பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு சில இடங்களில் தான் மீனவர்களுக்கு பிரச்சனைகள் இருந்தன. ஆனால், தற்போது பாஜகவின் ஆட்சிக் காலத்தில் மீனவர்களைச் சிறைபிடிப்பது, அவர்களுடைய படகுகளைப் பறிமுதல் செய்வது என மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனைகள் எல்லாம் இப்போது தான் அவர்களின் கண்ணுக்குத் தெரிகிறது போல்.
இதை மக்கள், குறிப்பாக மீனவர்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். பாஜக தேர்தலுக்காகப் போடும் இந்த அரசியல் வேஷம் எல்லாம் பெரியாரின் மண்ணில் கண்டிப்பாக எடுபடாது என்பது மீனவர்கள் உட்பட அனைத்து தரப்பட்ட மக்களும் அறிந்திருக்கின்றனர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:"இந்திய ஜனநாயகத்தை உடைக்க விட்டுவிடாதீர்கள்" - மதுரை தேர்தல் களத்தில் நடிகை ரோகிணி அளித்த சிறப்பு பேட்டி!