தஞ்சாவூர்:கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மாநிலங்களவை உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 4 கோடி 94 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நோயாளிகளின் உதவியாளர்கள் காத்திருப்பறை, டயாலிசிஸ் பிரிவு, மருத்துவர் உணவு கூடம், கட்டண சிகிச்சை பிரிவு ஆகியவற்றை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, இதே வளாகத்தில் ரூ.5 கோடி 40 லட்சம் மதிப்பீட்டில் உருவாகவுள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவு, செவிலியர் ஓய்வறை மற்றும் சிறப்பு சிகிச்சை பிரிவு ஆகிய புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இதில், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, “மேயர் கே.சரவணன் பேசும் போது, நல்லா இருந்தா தான் படிக்க முடியும் என்று கூறினார். ஆனால், அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி பேசும் பொழுது நல்லா படிச்சா தான் பாத்துக்க முடியும் என்கிறார்கள். முதலில் நீங்கள் இருவரும் கலந்து பேசி எந்த துறைக்கு முக்கியத்துவம் தருவது என முடிவிற்கு வாருங்கள்.
எது எப்படியிருந்தாலும், கல்வித்துறைக்கு வரும் நிதியை நான் ஏன் விட்டு கொடுக்க வேண்டும். கொடுங்கள் கண்டிப்பாக பிள்ளைகளை படிக்க வைக்கின்றோம். தமிழக முதல்வரின் நோக்கம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கின்ற மருத்துவமனையும் தன்னிறைவு பெற்றதாக இருக்க வேண்டும். அமைச்சர் உதயநிதியின் குறிக்கோள் தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வர வேண்டும் என்பது தான்” இவ்வாறு அவர் கூறினார்.