சென்னை:புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எஸ் மணி, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த நிகழ்வு தொடர்பான வழக்கின் விசாரணை 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
உயர் நீதிமன்றமும் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஒரு நபர் ஆணையம் மற்றும் சிபிசிஐடி தரப்பில் அவ்வப்போதைக்கு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும், தற்போதைய விசாரணை நிலை குறித்த அறிக்கை தயாராக உள்ளதாகவும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.