தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்கு; தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - Postal Vote Case - POSTAL VOTE CASE

Railway employees Postal Vote Case: ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தெற்கு ரயில்வே மற்றும் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

railway employees postal vote
ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 4:18 PM IST

சென்னை:தபால் வாக்கு செலுத்தும் வசதியை ரயில்வே துறை ஊழியர்களுக்கும் வழங்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தெற்கு ரயில்வே மற்றும் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தலில், ராணுவம், துணை ராணுவப்படை வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஊடகத்தினர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வாக்களிக்க ஏதுவாக, தபால் வாக்கு செலுத்த அனுமதியளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இதில் ரயில்வே தொழிலாளர்கள் சேர்க்கப்படவில்லை என்றும், அவர்களையும் சேர்க்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும், மதுரை கோட்டத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் ராம்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், "கேரளாவில் ரயில்வே துறையினருக்குத் தபால் வாக்கு செலுத்த அனுமதியளிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலைய அதிகாரிகள், ரயில் ஓட்டுநர்கள் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் வாக்கு செலுத்த விடுப்பு எடுக்க முடியாது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ரயில்வே துறை ஊழியர்களுக்குத் தபால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

அதேபோன்று, இந்த மக்களவைத் தேர்தலிலும் தபால் வாக்களிக்க அனுமதிக்கக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்திருந்தோம். ஆனால், மனுவானது பரிசீலிக்கப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், தபால் வாக்குப் பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்குக் கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தபால் வாக்குப் பதிவு செய்ய விண்ணப்பிக்க, மார்ச் 25ஆம் தேதி தான் கடைசி நாள் என்பதால், இனிமேல் அனுமதிக்க இயலாது எனவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து, ரயில்வே துறை தரப்பில் தான் தவறு எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:சென்னை - நாகர்கோவில் இடையே வாரம் மும்முறை வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை - Vande Bharat Express

ABOUT THE AUTHOR

...view details