தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு.. நடிகர் விஷாலுக்கு கால அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்! - Vishal Film Factory

Actor Vishal Case: விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கோரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க விஷால் தரப்பில் கால அவகாசம் கேட்டதை அடுத்து, கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Actor Vishal Case
விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 9:18 PM IST

சென்னை: விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காகச் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையைத் திருப்பிச் செலுத்தாத நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை வழக்கு கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதிசெய்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் மற்றும் விஷால் இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய ஆடிட்டர் ஶ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து 3 ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கு விவரங்களையும், இன்றைய நாள் வரைக்குமான வங்கிக் கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 04) மீண்டும் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் தரப்பில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆடிட்டர் சில ஆவணங்கள் கேட்டு தனது ஆடிட்டருக்கு அனுப்பிய கடிதம் தற்போது தான் கிடைத்துள்ளது என்பதால், அந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

நடிகர் விஷால் தரப்பு கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.டி.ஆஷா, ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை மார்ச் மாதம் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.. வருவாய்த்துறையினர் தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு?

ABOUT THE AUTHOR

...view details