சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில் வைகோ வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மருத்துவமனையில் இருந்தபடியே வெளியிட்ட வீடியோவில், 'தமிழகத்தில் பொது ஊழியம் செய்கின்ற சாதாரண தொண்டனாகிய இந்த வைகோ, ஏறத்தாழ 7 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்திருக்கிறேன். கீழே விழுந்ததில்லை. ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி சென்றபோது, தங்கி இருந்த வீட்டில் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருந்த திண்ணையில் ஏறினேன். அப்போது நிலை தடுமாறி விழுந்து விட்டேன்.
தலையிலோ, முதுகெலும்பில்லோ அடிபட்டிருந்தால் நான் இயங்க முடியாமல் போயிருக்கும். நல்ல வேளையாக இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் மருத்துவரிடம் பரிசோதித்து அவரின் அறிவுரைப்படி சென்னைக்கு உடனடியாக சிகிச்சைக்காக புறப்பட்டு வந்தேன்.
பயப்படத் தேவையில்லை; கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஓய்வு தேவை. அந்த ஓய்வு இப்போது கிடைத்திருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அப்போலோ மருத்துவமனையில் இன்று எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. தோள்பட்டை எலும்பு இரண்டு சென்டிமீட்டர் உடைந்துள்ளது.