மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் 2000-வது ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது முற்றிலும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடக் கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தினசரி நாளிதழ், அறிவிப்பு கடிதம் மற்றும் பல கூட்டங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்டும் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட தொடர் அறிவுறுத்தலுக்கு பிறகும் சட்ட விதிகளுக்கு கட்டுப்படாமல் சுருக்குமடி வலையினை படகில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
ஆகவே, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நிலைப்படுத்திடவும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கடல் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும், ஒட்டு மொத்த மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து மயிலாடுதுறை மாவட்ட கடல் பகுதியிலும் மீனவ கிராம பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.