திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலு முத்து, ஊத்து காக்காச்சி என பல்வேறு மலைக் கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வாழும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்குள்ள தேயிலை தோட்டப் பணிகளை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்த தேயிலை தோட்டப்பகுதி சிங்கம்பட்டி சமஸ்தானம் கட்டுப்பாட்டிலிருந்த நிலையில், 1929ஆம் ஆண்டு 'தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் மூலம் தேயிலைத் தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு, சுற்று வட்டாரத்தில் உள்ள 2 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் 2028ஆம் ஆண்டுடன் அந்த நிறுவனத்திற்கான குத்தகை ஒப்பந்தம் நிறைவு பெற உள்ள நிலையில், அந்த இடத்தை ராயத்துவாரி பட்டா வழங்கக்கோரி நீதிமன்றத்தில் பிபிடிசி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு தொடர்ந்தது. ஆனால், அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜூன் மாத இறுதிக்குள் தேயிலைத் தோட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்களை காலி செய்வதற்கு தேயிலைத் தோட்ட நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது, தொழிலாளர்களை விருப்ப ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் 15ஆம் தேதிக்குள் அவர்களை அதில் கையெழுத்திட கட்டாயப்படுத்தி வருவதாகவும், ஆகையால் அப்பகுதியில் பல தலைமுறைகளாக பணி செய்து வரும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டம் மக்கள் நலச்சங்கம் சார்பில் தேயிலை தோட்ட நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.