சென்னை:கடந்த மாதம் ஆகஸ்ட் 28ஆம் தேதி பரம்பொருள் பவுண்டேஷன் சார்பாக அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு சொற்பொழிவாற்றினார். அப்பொழுது மாணவ மாணவிகளிடம் மூடநம்பிக்கை தனமாக பேசியதாகவும், மாற்றுத்திறனாளிகள் பற்றி அவதூறான வார்த்தைகளை குறிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என ஏற்கனவே சைதாப்பேட்டை, திருவெற்றியூர் ஆகிய காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விமான நிலையத்தில் விளக்கம் தருவதாக மகா விஷ்ணு தெரிவித்திருந்தார். இதற்காக விமான நிலையத்தில் ஊடகத்தினர் காத்திருந்தனர். அப்போது காவல்துறையினர் வழக்கத்திற்கு மாறாக குவிந்திருந்தனர்.
மேலும் பயணிகள் வழக்கமாக வரும் வழியில் மகா விஷ்ணுவை அழைத்து வராமல், ஊடகத்தினர் சந்திக்காத வகையில் காவல்துறையினர் அவரை கைது செய்து வேறு வழியில் அழைத்து சென்றனர். விமான நிலையத்தில் இருந்து மகா விஷ்ணுவை அழைத்துச் சென்ற போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.
ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு:இந்நிலையில், மகா விஷ்ணு மீது BNS சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளிலும் IPC -இன் 2016 act 92 பிரிவு என மொத்தம் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்டப்பிரிவு 192 -கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, 196 (1) (a) - சமூகத்தில் வெறுப்பான தகவல்களை பரப்புவது, 352 - பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசுவது, 353 (2) -மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது,மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டங்களின் கீழாக 92 (a) பிரிவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான குற்றம் செய்வது ஆகிய பிரிவுகளின்கீழ் மகாலிஷ்ணு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.