மதுரை:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 2024 - 25ஆம் ஆண்டிற்கான வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும், எதிர்ப்பும் வந்த வண்ண உள்ளது. இந்நிலையில், இந்த பட்ஜெட் குறித்து மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கியுள்ளார்.
அதில் பேசிய அவர், “சிறு, குறு தொழில்களுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் ஓரளவிற்கு பயன்கள் இருக்கிறது. கடன் உத்திரவாத திட்டத்தின் மூலமாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய் கடனுதவித் திட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இருந்தாலும், திட்டத்தின் அடிப்படையில் அனைத்து வங்கிகளும் கடன் உதவி வழங்கும் வகையில் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
மேலும், இந்த முத்ரா திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்ட ரூபாய் 10 லட்சம் என்ற தொகையை 20 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது சிறு, குறு தொழில்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். அதேபோல், 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க இருப்பதாக இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் 12 தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. சென்னை - விசாகப்பட்டினம் தொழில் வழி வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு முன்பாக 2000ஆம் ஆண்டில் கன்னியாகுமரி - சென்னை தொழில் வழித்தடம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது அறிவிப்போடு நின்று விட்டது.
இதேபோல் தமிழக அரசும் மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச்சாலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஆகையால், தற்போது அறிவித்த தொழில் வழிச்சாலை குறித்த அறிவிப்புகளை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.
மேலும், அரசு மற்றும் தனியார் கூட்டு திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல கூட்டு முயற்சியாக நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.