மதுரை:மதுரையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அதிக வட்டி தருவதாக கூறி பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இருந்து 5000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டது.
நியோமேக்ஸ் நிறுவனத்தின் மோசடி குறித்து மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்ததின் பேரில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முக்கிய இயக்குநராக உள்ள கமலக்கண்ணன், வீரசக்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி ரவிசங்கர், ராஜ்குமார் ஆகிய இருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க:நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, மகனை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் நம்பி செல்வன், நீயோமேக்ஸ் நிதி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சொந்தமாக சுமார் 51 லட்ச சதுர அடி நிலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கண்டறியபட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த சொத்துக்களை முடக்கி, அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி அரசிதழில் வெளியிடப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:காரைக்கால் கடலில் மூழ்கி கல்லூரிகள் மாணவர்கள் உயிரிழப்பு - விடுமுறை கொண்டாட்டத்தில் சோகம்!