சென்னை: திருவான்மியூர் திருவள்ளூர் நகரில் செயல்பட்டு வரும் இந்து சேவா சமாஜம் நடத்தும் பள்ளிக்காக, கடந்த 1989-ல் சுமார் 1,900 சதுர மீட்டர் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கியது. இந்த நிலத்திற்கான விலையில் பாதி தொகையான 22 லட்சத்து 33 ஆயிரத்து 946 ரூபாய்க்கு இந்து சேவா சமாஜத்திற்கு விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஒப்பந்தத்தில், நிலத்தை பள்ளிக்கு விளையாட்டு மைதானமாக பயன்படுத்த வேண்டும். பகுதி மக்களும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த நிலத்தில் பள்ளியை கட்டிய சமாஜம், மீதமுள்ள 50 சதவீத இடத்தையும் தங்களுக்கு விற்பனை செய்யுமாறு வீட்டு வசதி வாரியத்திடம் கோரிக்கை வைத்தது.
இதனை ஏற்ற வாரியம், 27 லட்சத்து 36 ஆயிரத்து 369 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்த நிலையில், 6 கோடியே 10 லட்சம் ரூபாய் தந்தால் விற்பனை செய்வதாக வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி நிலத்தை விற்பனை செய்யுமாறு வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி, இந்து சேவா சமாஜம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.