சென்னை: மத்திய அரசின் நபார்டு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இந்த கடன் வசதியைப் பெறும் விவசாயிகள், டான்ஃபெட் வழங்கும் இயற்கை உரத்தை வாங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாக, கடலூரைச் சேர்ந்த விவசாயி ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய இந்த இயற்கை உரங்களால் எந்த பயனும் இல்லை எனவும், அவை வெறும் மண் தான் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக உள்ளூர் வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இதில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாகவும் மனுவில் குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும், நகராட்சிகள், பேரூராட்சிகள் உற்பத்தி செய்யும் இந்த இயற்கை உரங்கள் டன்னுக்கு 1,000 முதல் 3,000 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படும் சூழலில் டான்ஃபெட் மூலம் விற்கப்படும் உரங்கள் டன்னுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.