சென்னை:சென்னை தீவுத்திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
அதேநேரம், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. மழை காரணமாக பந்தயச் சாலையை ஆய்வு செய்து சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை 4 மணி நேரம் நீட்டித்து தர வேண்டும் என அவசர முறையீடு விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் சுரேஷ்குமார், பாலாஜி அமர்வில் இன்று (ஆகஸ்ட் 31) மாலை 4 மணிக்கு விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி அறிவித்தார். இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கறிஞர்கள் எட்வின் பிரபாகர் மற்றும் முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகினர்.