தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எதன் அடிப்படையில் ரூ.10 லட்சம் நிவாரணம்? - கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கேள்வி - Kallakurichi Hooch Tragedy - KALLAKURICHI HOOCH TRAGEDY

kallakurichi kalla sarayam death: நாட்டுக்காக உயிரிழக்காமல், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏன் வழங்கப்பட்டது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், மது தொடர்பான கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம், மது தொடர்பான கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 1:42 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து வழங்கி வருகின்றது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ''கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயலாகும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக்கூடாது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ''தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை'' எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், ''கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ? சமூக சேவகர்களோ? சமூகத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களோ அல்ல என்பதால், அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என அம்மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்த போது, ''கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம் எனவும், இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்'' எனக் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த தொகையை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10,877 அரசுப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் அவலம் - வெளியான அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details