சென்னை: சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க:மன்னிப்பு கேட்டாலும் இர்பான் மீது நடவடிக்கை உறுதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆவேசம்
இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று (அக் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக கூறியது தகவல் தானே தவிர அவதூறு அல்ல. சபாநாயகரின் பேச்சு அதிமுக, பாபு முருகவேலுக்கு எதிரானதல்ல எனவும், பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் 40 எம்.எல்.ஏ.க்கள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும். அதற்கு அவர்களின் பெயரை சபாநாயகர் தனது பேச்சில் குறிப்பிடவில்லை எனவும் வாதிட்டார்.
சம்பவம் நடந்த போது, அதிமுக உறுப்பினராக இல்லாத புகார்தாரருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பாதிக்கப்படாதவர் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
புகார்தாரர் பாபு முருகவேல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சபாநாயகரின் பேச்சு நிச்சயமாக அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், புகார்தாரர், கட்சியில் சாதாரண உறுப்பினர் மட்டும் அல்ல. வழக்கறிஞர் அணி இணை செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதனால் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய புகார்தாரருக்கு உரிமை உள்ளது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாபு முருகவேல் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு வழக்கு தொடர அதிமுக அங்கீகாரம் வழங்கியதா? என கேள்வி எழுப்பி அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்