சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, செம்பியத்தில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை (ஜூலை 7) வைக்கப்பட உள்ளது. அதற்காக பள்ளிக்கூடத்தை காவல்துறை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் எந்த முடிவும் தெரிவிக்காததால், கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பில் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனிடம் அவசர முறையீடு செய்தனர்.