சென்னை:நாய்களால் கடிக்கப்பட்ட குரங்கு குட்டியின் நிலை குறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய கால்நடை மருத்துவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கால்நடை மருத்துவர் வல்லையப்பன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ''கடந்த 2023 டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நாய்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் ஒப்படைத்தார்.
சுமார் 2 மாதங்களேயான 200 கிராம் எடையுள்ள அந்த குரங்கு குட்டிக்கு சிகிச்சை அளித்தேன். அந்த குரங்கு குட்டியின் இடுப்பு பகுதியில் அதிக காயம் இருந்தது. அந்த குரங்கால் சுயமாகவும் செயல்பட முடியாததால், தனது கட்டுப்பாட்டில் வைத்து சிகிச்சை அளித்தேன். சுமார் 10 மாதங்கள் சிகிச்சைக்கு பிறகு குரங்கு குட்டி குணமானது. இந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் அந்த குரங்கு குட்டியை அக்டோபர் 26ம் தேதி தன்னிடம் இருந்து வாங்கி சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டனர். இதனால் அந்த குரங்கு குட்டியின் உடல்நிலை மீண்டும் பாதிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:சார்ஜ் போடாமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ஓட்டலாம்; அது எப்படி சாத்தியம்?
குரங்கு குட்டிக்கு போதுமான சிகிச்சை அளிக்க வேண்டும். சத்தாண உணவு தர வேண்டும். எனவே, குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் வளர்க்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு இன்று (நவம்பர் 06) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, சிகிச்சை முடியும் முன்பே தங்களிடம் இருந்த குரங்கை வனத்துறை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டுள்ளது. அதனால் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
அப்போது வனத்துறை சார்பில், மனுதாரர் தான் வனத்துறையிடம் குரங்கை ஒப்படைத்ததாகவும், தற்போது மீண்டும் ஒப்படைக்க கோருவதாகவும், நீதிமன்றத்தில் வனத்துறை நடவடிக்கை எடுத்ததாகவும் மாற்றி கூறுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, குரங்கின் தற்போதைய நிலை என்ன என்பதை மனுதாரர் நேரில் ஆய்வு செய்து முடிவு செய்யலாம். நவம்பர் 09 (சனிக்கிழமை) அன்று வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மனுதாரர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வனத்துறை சார்பில் குரங்கின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து நவம்பர் 14ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்