சென்னை: உயர்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம், ஏழைகள் என பலதரப்பட்ட மக்களை கொண்டுள்ள தொகுதியாக தென்சென்னை திகழ்கிறது. நடைபெற்று முடிந்துள்ள 2024 மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் மொத்தம் 54.27 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக சார்பில் ஜெயவர்தனும் மீண்டும் களமிறங்கி உள்ளனர். பாஜக வேட்பாளராக, தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்ச்செல்வியும் போட்டியிட்டுள்ளனர். 'முத்தமிழ்'கள் (தமிழச்சி தங்கபாண்டியன், தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்ச்செல்வி) களம் கண்டுள்ள தொகுதி என்று மகிழ்ச்சியுடன் கூறும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு தென்சென்னை (south chennai constituency) அளித்துள்ளது.
திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன் சிட்டிங் எம்.பி. என்கிற அந்தஸ்துடன் தொகுதியை வலம் வந்து வாக்கு சேகரித்தார். இவருக்கு ஆதரவாக தொகுதியைச் சேர்ந்த முக்கிய அமைச்சரான மா.சுப்பிரமணியன், தொகுதி முழுவதும் வளைய வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் கட்டுகட்டிக்கொண்டும், கைத்தடியை ஊன்றியபடியும் தொகுதி முழுவதும் பறக்க பறக்க தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு தமிழச்சி தங்கபாண்டியன் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தார்.
திமுக வேட்பாளரின் பிரசார உத்தி இப்படியென்றால், பிரதமர் மோடியையே அழைத்துவந்து தென்சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான தியாகராய நகரில் 'ரோடு ஷோ ' நடத்தி கெத்து காட்டியுள்ளது பாஜக. ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களம் கண்டிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் நேரடியாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் வாக்காளர்களை சென்றடைவதில் ஆர்வம் காட்டினார்.
தொகுதியின் முன்னாள் எம்.பி., என்ற உரிமையுடனும், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகன் என்ற அடையாளத்துடன் தொகுதி முழுவதும் வலம் வந்து தன் பங்கிற்கு வாக்கு சேகரித்தார் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன். கூட்டணி கட்சியான தேமுதிகவின் தொண்டர்கள் அவரின் பிரசாரத்துக்கு பக்கபலமாக இருந்தனர். திமுக, அதிமுக, பாஜக, நா.த.க என நான்குமுனைப் போட்டி நிலவும் தென்சென்னையில் இந்த முறை வெற்றி வாகைச் சூடப் போவது யார் என்பது ஜூன் 4 -இல் தெரிந்துவிடும்.
குறைந்த வாக்குப்பதிவு:இத்தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் மொத்தம் 57.07 சதவீத வாக்குகள் பதிவாகின. இவற்றில் திமுக வேட்பாளராக களமிறங்கிய தமிழச்சி தங்கபாண்டியன் மட்டுமே 50.15 சதவீதம் வாக்குகளை (5.64,872 வாக்குகள்) அள்ளினார். 2. 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அவருக்கு அடுத்ததாக அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன் 26.87 சதவீத வாக்குகளை (3,02,649) பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான ஆர்.ரங்கராஜன் 12.02 சதவீதம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஏ.ஜெ.ஷிரைன் 4.45 சதவீதம் ஓட்டுகளையும் பெற்றனர் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக மீது தமிழக வாக்காளர்கள் மத்தியில் பரவலாக இருந்த அதிருப்தியும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததும், திமுக கூட்டணி வெற்றிப் பெற முக்கிய காரணியாக இருந்தது. கடந்த முறையைக் காட்டிலும் தற்போது வாக்குப்பதிவு சதவீதம் சற்று குறைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. தென்சென்னை தொகுதி மக்கள் இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பை தரப் போகின்றனர் என்பது ஜூன் 4ம் தேதி தெரியவரும்.
இதையும் படிங்க:"தமிழகத்திற்கு நிதியும் கிடைத்துள்ளது நீதியும் கிடைத்துள்ளது" - தமிழிசை சௌந்தரராஜன் ஸ்டாலினுக்கு பதிலடி!