தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணைவேந்தரை கண்டித்து போராட்டம்..? - பெரியார் பல்கலைக்கழகத்தில் நடப்பது என்ன? - Salem Periyar university - SALEM PERIYAR UNIVERSITY

Protest against vice chancellor in Periyar University: சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் ஊழல் முறைகேட்டில் சிக்கிய முன்னாள் பதிவாளருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ள துணைவேந்தர் ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள்
பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் (Photo credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 5:21 PM IST

பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் அளித்த பேட்டி (Video Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தமிழக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வருவதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள, அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீது எட்டு குற்றச்சாட்டுகள் உறுதியானதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் பணி ஓய்வுபெற இருந்த தங்கவேலை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு, பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு 2 முறை கடிதம் அனுப்பியது.

இருப்பினும், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு பதவி ஓய்வு வழங்கினார்.

இதனிடையே, இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தங்கவேலுக்கு தற்காலிகமாக மாதம் 74 ஆயிரத்து 700 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கிட துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் தற்போதைய பதிவாளர் (பொறுப்பு) விஸ்வநாதமூர்த்தி ஆகியோர் அண்மையில் ஆணை பிறப்பித்திருந்தனர்.

துணைவேந்தரின் இந்த நடவடிக்கைக்கு பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பல்கலைக்கழக விதிகளை மீறி துணைவேந்தர் ஜெகநாதன் செயல்படுவதாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், துணைவேந்தர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக முதலமைச்சர் மற்றும் உயர் கல்வித்துறை செயலருக்குக் கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் கூறுகையில், "பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொறுப்பு பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டும், துணைவேந்தர் ஜெகநாதன் ஏற்கெனவே தன்னிச்சையாக செயல்பட்டு அவருக்கு பதவி ஓய்வு வழங்கியுள்ளார்.

மேலும், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் ஓய்வுபெற்று பல ஆண்டுகளாகியும் இன்று வரையிலும் அவர்களுக்கு எந்த பணப்பலனும் வழங்கப்படவில்லை. ஆனால் தனக்கு வேண்டியவராக இருந்த தங்கவேலுக்கு மட்டும் ஓய்வூதிய பலன்கள் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார். துணைவேந்தரின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று சக்திவேல் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழகத்தில் கல்வி 'கலைஞர்' மயமாக்கப்பட்டு வருகிறது - தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!

ABOUT THE AUTHOR

...view details