கோயம்புத்தூர்:நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (பிப்.4) நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். இதேபோல், கேரளா மற்றும் தமிழக நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் தலைமையில், கேரள மாநிலத்திலும், தமிழகத்திற்கான மாநாடு கோவையிலும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சிப் பணிகளை முடுக்கிவிடும் வகையில், தமிழக நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் கோவையில் இன்று நடைபெற உள்ளது.
மேலும், வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேசிய தலைமை மற்றும் நாடாளுமன்றக் குழு அறிவிப்பார்கள். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரும்பி கோவையில் போட்டியிட்டால், அதற்கான வேலைகளை செய்யத் தயாராக உள்ளோம். 2014 தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி கிட்டத்தட்ட 19 சதவீத வாக்குகள் பெற்றதோடு, கன்னியாகுமரி மற்றும் தருமபுரியில் வெற்றி பெற்றது. எனவே, மூன்றாவது அணி அல்லது திமுக, அதிமுக அல்லாத மற்ற கட்சிகள் வர முடியாது என்பது பொய்யாகி உள்ளது.