சென்னை: சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு இருப்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இது தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்; மதுரையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் மாநில அமைச்சர் குடியிருக்கும் சாலையிலேயே வெட்டிக் கொலை செய்யப்படுகிறார்; காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
கள்ளக்குறிச்சியில் 70க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயத்தினால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று ஒட்டுமொத்தமாக செயலிழந்த அரசாங்கமாக உள்ளது. சட்ட ஒழுங்கு பற்றி கவலைப்படாததால் தான் ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் நடந்துள்ளது" என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.
அதன் தொடர்ச்சியாக மின் கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தமிழ்நாட்டு மக்களுக்கு மின்சார கட்டணம் உயர்வு பெரிய பேரிடியாக உள்ளது. திருப்பூர், ஓசூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் கோவை போன்ற நகரங்களில் மின்சார கட்டணத்தினால் பல தொழில் நிறுவனங்கள் தற்போது முடங்கிய நிலையில் உள்ளது.