திருப்பத்தூர்:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சார பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் மக்களவைத்தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ நேற்று (ஏப்.4) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார்.
அப்பொழுது பேசிய அவர், “மோடி 10 வருட ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் அள்ளி கொடுத்துள்ளார். ஆனால் திமுகவினர் பிரதமர் மோடியை 29 பைசா பிரதமர் என விமர்சிக்கின்றனர். தமிழகத்திற்கு மட்டும் 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து இருக்கிறார். அதனை திமுகவினர் என்ன செய்தார்கள்?. மோடி உலகின் எந்த நாடுகளுக்கு சென்றாலும் தமிழ் மொழி, கலச்சாரம், தமிழ் மண், திருக்குறள், திருவள்ளுவர், பாரதியார் பற்றி பேசாமல் இருந்தது கிடையாது.
ஆயிரம் ரூபாய் வந்ததால் தான் பெண்கள் மின்மினுக்கிறீர்கள் என்று அமைச்சரின் மகன் சொல்கிறார். அவர்களது குறைகளை மறைக்க ஆயிரம் ரூபாயை பெண்களுக்கு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சரியில்லை. தமிழ்நாடு சிறந்த ஆட்சியில் முதலிடம் என்று கூறுகிறார்கள். ஆனால் கடன் வாங்குவதில் தான் தமிழ்நாடு தற்போது முதலிடமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்று இருக்கிறார்கள்.