சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொன்மையான இடங்கள் மற்றும் ஆன்மீக தலங்களை பார்வையிட கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட வரலாற்று ஆர்வலர்கள் இரண்டு நாட்கள் சுற்றுலா களப்பயணமாக வருகை தந்தனர்.
இதில் முதல் நாளான நேற்று சனிக்கிழமை (டிசம்பர்.14) காளையார்கோவில், அரண்மனை சிறுவயல், திருமலை, திருக்கோஷ்டியூர், இளையாத்தங்குடி, இரணியூர் ஆகிய கோயில்களுக்குச் சென்றனர். மேலும் காளையார்கோவில் அருகில் உள்ள புரசடை உடைப்பு பெருங்கற்கால காலக்கணக்கு நடுகற்களைப் பார்வையிட்டு வியந்தனர்.
புரசடை உடைப்பு பெருங்கற்கால காலக்கணக்கு நடுகற்கள் அருகே வரலாற்று ஆர்வலர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu) கருப்பு சிவப்புப் பானை ஓடு:இதுகுறித்து சிறப்பு விருந்தினரான வானியல் ஆய்வாளர் பாலபாரதி அந்த இடத்தின் தொன்மை குறித்து விளக்கினார். அப்போது பேசிய அவர், “காளையார் கோயில் அருகே புரசடை உடைப்பு என்னும் இடத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமக்காடு உள்ளது. இவ்விடத்தைச் சுற்றிலும் தொல்குடியிருப்புகள் அதிக அளவில் அமைந்துள்ளன.
புதை குழி (Credits- ETV Bharat Tamil Nadu) பெருங்கற்காலத்தை சேர்ந்த கருப்பு சிவப்புப் பானை ஓடு (BRW) பண்பாட்டுடன் இங்கு வாழ்ந்த முன்னோர்களைப் புதைத்துச் சடங்குகள் செய்யும் ஈமக்காட்டில் நெடுங்கற்களை நட்டு வைத்துள்ளனர். இந்த கல் அமைப்புகள் சூரியனின் வட, தென் செலவு இயக்கங்களை தெரிந்து கொள்வதற்காக அக்கால மக்கள் உருவாக்கி வைத்தவை ஆகும். இதுபோன்ற வானியல் தொடர்பிலான கற்களால் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் ஆந்திரா, கர்நாடகப் பகுதிகளில் பெருங்கற்கால வாழ்விடங்களுக்கு அருகிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கின்றன” என்றார்.
இதையும் படிங்க:ஏரியாக மாறிய விவசாய நிலம்! விளையும் பயிர் வெள்ளத்தில் மூழ்கிய சோகம் - MAYILADUTHURAI FARM LAND DESTROYED
பழமையான வானியல் ஆய்வுத்தளம்:இதையடுத்து புரசடை உடைப்பு பெருங்கற்கால புதைவிடத்தை ஆர்வலர்கள் குழு பார்வையிட்டபோது, ஒரு புதைகுழியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு கருப்பு நிற முதுமக்கள் தாழி மற்றும் கருப்பு சிவப்பு நிறத்தில் உள்ள சிறிய வகையிலான மண்பாண்டங்களும் வெளிப்பட்டன இதுகுறித்து ஆய்வாளர் இலந்தகரை ரமேஷ் விரிவாக விளக்கினார்.
இதுகுறித்து கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தின் தலைவர் கோபிநாத் கூறுகையில், “புரசடை உடைப்பில் உள்ள இந்த வானியல் சார்ந்த தொல்லியல் தளத்தை தமிழக தொல்லியல் துறை மற்றும் இந்திய தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு வந்து இவ்விடத்தில் அரசு முறைபடியான அகழாய்வுகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
புரசடை உடைப்பு பெருங்கற்கால காலக்கணக்கு நடுகற்கள் அருகே வரலாற்று ஆர்வலர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu) இந்த பயணத்தில் சிறப்பு விருந்தினராக திறந்த வெளி சிறைச்சாலை கண்காணிப்பாளர் அருண் ராஜ் மற்றும் வரலாற்று ஆய்வாளர் மரு.சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பயணத்தின் இரண்டாவது நாளான இன்று காரைக்குடி, திருக்கோளக்குடி, பூலாங்குறிச்சி மற்றும் நகரத்தார் கோவில்களை பார்வையிட்டு அவற்றின் வரலாற்று தகவல்களை அனைவரும் தெரிந்து கொண்டனர்.