புதுக்கோட்டை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை மக்களவை உறுப்பினராக மீண்டும் கார்த்தி சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்த சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கார்த்தி சிதம்பரம் நன்றி தெரிவித்து பொதுமக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்.
எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அதன்படி, சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கார்த்தி சிதம்பரம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருடன் இணைந்து பொதுமக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்துப் பேசுகையில், “மீண்டும் தன்னை லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்ற முறை மக்கள் பணியாற்றி உங்களுடைய குறைகளைத் தீர்த்து வைத்தது போன்று, இந்த முறையும் உங்களுடைய குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு முயற்சி எடுக்கப்படும். நீங்கள் எந்த விதமான குறைகளையும் என்னிடம் கூறினால் அதன் மீது நடவடிக்கை எடுத்து பிரச்னை தீர்க்கப்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், "மத்திய அமைச்சரவையில் சென்ற முறை அவர்கள் என்ன பொறுப்பு வகித்தார்களோ, மீண்டும் அவர்களுக்கே அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது, அது வருத்தத்துக்குரியது. கடந்த முறை அந்த பொறுப்பிலிருந்தவர்கள் சரியாக செய்யவில்லை என்பதுதான் எங்களுடைய வாதம். மீண்டும் அவர்களுக்கே அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.
பாஜகவில் சிறுபான்மையினருக்கு சீட்டுக் கொடுத்து உள்ளனரா என்பது கூட தெரியாது. இஸ்லாமிய சமுதாயத்தினர் யாருக்கும் பாஜக சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த முறை நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும். தமிழக அரசு கூறியபடி நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதி உள்ளேன்.
மத்திய அமைச்சரவையில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு வாரிசு அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த கேள்விக்கு, தமிழகத்திற்கு வரும்போது எல்லாம் வாரிசு குறித்து பிரதமர் பேசுவார். ஆனால், நடைமுறையில் அவர் வேறுபாடாக செய்வார் என்பதை இது காட்டுகிறது. எந்த ஒரு மாற்றத்தையும் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது, ஏமாற்றம் தான் வரும்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவர் பதவி ஏற்றுள்ளதால், காவேரி பிரச்னையில் எந்த விதமான பின்னடைவும் தமிழகத்திற்கு வராது. தமிழக அரசு வரவிடாது 40 எம்பிகளும் வர விடமாட்டோம். காங்கிரஸ் மாநில கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. இருப்பினும், மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது போன்று காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்பது சரிதான்.
பதவி ஏற்பு விழாவின் போது குடியரசுத் தலைவர் மாளிகை பின்னணியில் சிறுத்தை போன்ற உருவம் சென்றதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, அது பூதமாக இருக்கும். சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் நடவடிக்கைகள் ஏற்கனவே பாஜகவிற்கு தெரியும் எந்த நேரத்திலும் அவர்கள் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
பாஜக தமிழகத்தில் வளரவில்லை. சாதி கட்சி உள்ளதோடு கூட்டணி வைத்து தான் பாஜக இந்த முறை வாக்குகளைப் பெற்றுள்ளது, பாஜக வளர்ந்துள்ளது என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் ஏற்கனவே பாஜகவில் குற்றப் பின்னணி உள்ளவர்களைச் சேர்க்கிறார்கள் என்று கூறியிருந்தோம். அதைத் தான் தற்போது தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:"தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது" - நெல்லை இந்து மக்கள் கட்சி நிர்வாகி விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி பேச்சு! - NEET EXAM