சிவகங்கை: தமிழகத்தில் ஆடி மாதத்தில் பொதுவாகவே வீடுகளில் சுப விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறைவு. இதனால் ஜவுளிக் கடைகளில் வருடம் முழுவதும் உள்ள பழைய இருப்பு ஜவுளிகளை லாப நோக்கம் இல்லாமல் தள்ளுபடி என்கிற பெயரில் விற்பனை செய்தால், புதிய ஜவுளிகளை மக்கள் பார்வைக்கு வைக்க முடியும் என்பதால், ஒவ்வொரு வருட ஆடி முதல் நாள் அனைத்து கடைகளிலும் போட்டிப்போட்டுக் கொண்டு தள்ளுபடி விற்பனை அறிவிப்பது வழக்கம்.
இந்த வரிசையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடை சார்பில், திருமண மண்டபத்தில் ஆடி முதல் தேதி மட்டும் பட்டுப் புடவைகளுக்கு 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி விற்பனை செய்தனர்.
இந்நிலையில் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்தும், காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் அதிகாலையிலே பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து காத்திருந்து தள்ளுபடி விலையில் பட்டுப்புடவைகளை எடுத்துச் செல்கின்றனர்.