காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காலண்டர் தெரு பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி (61). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், கஸ்தூரி காவல் ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து வட்டிக்கு விடுவது, சீட்டு நடத்துவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கஸ்தூரியின் மகன் தற்பொழுது டேராடூன் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
மேலும், கஸ்தூரிக்கு ரியல் எஸ்டேட் வேலைகளில் மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி என்பவர் உதவியாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்தூரி தங்கியிருந்த வீட்டில் துர்நாற்றம் வரவே, அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது கஸ்தூரி சடலமாக இருந்துள்ளார். உடனடியாக சடலத்தை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், கஸ்தூரியின் உடலில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்காயம் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.