சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்கவிழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (பிப்.21) கொண்டாடப்பட்டது. இதனை கமல்ஹாசன் கொடி ஏற்றி வைத்து தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த ஏழு ஆண்டுகள் எப்படி கடந்தது என்பதே தெரியவில்லை. நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன். அல்ல சோகத்தில் வந்தவன். இத்தனை ஆண்டுகளாக மக்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? என்று வந்த கோபம் அது.
என்னிடம் பலரும், எனது கட்சியினரும் கூட ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் ஏன் சினிமாவை விட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என்று கேட்கிறார்கள். இங்கு முழு நேர அரசியல்வாதி என்பவர் யார்? முழுநேர அரசியல்வாதி யாரும் இல்லை. முழுநேர கணவரும் இல்லை, முழுநேர மனைவியும் இல்லை, முழுநேரப் பிள்ளையும் இல்லை.
விஜயின் அரசியலுக்கு முதல் குரல் என்னுடையது:விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற முதல் குரல் என்னுடையதுதான். அவர், சினிமாவை விடுகிறேன் என்றால், அது அவருடைய பாணி. என்னுடைய பாணி வேறு என்று தெரிவித்தார்.
கோவையில் தோற்றது நானில்லை; ஜனநாயகம்:மேலும் பேசிய அவர், 'நான் திருடிய பணத்தில் கட்சி நடத்தவில்லை. என்னுடைய சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறேன். நான் கோவை தெற்கு தொகுதியில் 1,728 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக சொல்கிறார்கள். அங்கு நான் தோற்கவில்லை. ஜனநாயகம் தோல்வியடைந்தது. ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டு வாக்கு செலுத்தும் வரையில் இந்த நிலைதான் ஏற்படும்.
என்னை அரசியலைவிட்டுப் போக வைப்பது கடினம்:அதற்கு கோவை தெற்கு தொகுதி ஒரு உதாரணம். கோவை தெற்கு தொகுதியில் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை. தேர்தல் நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் மாறுதல் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களிக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் 40% பேர் வாக்கு செலுத்துவதில்லை. இந்நிலை மாறவேண்டும். என்னை அரசியலுக்கு வரவைப்பது கஷ்டம் என்றார்கள். போக வைப்பது அதை விட கஷ்டம். மக்களிடம் இருந்து திருடுவதற்கு நான் வரவில்லை. என்னுடைய அரசியல் ஆரம்பித்து விட்டது. அழுத்தமாக பயணித்து கொண்டிருப்பேன்.